நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை, மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி, பரவை சந்தைகள், கோவை மலுமிச்சம்பட்டி சந்தை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சந்தை மற்றும் சென்னை கோயம்பேடு சந்தைகள் காய்கறி வியாபாரத்தில் பிரதானமானவை.
குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை 180 விற்பனை செய்யப்பட்டு வந்தது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. அதே போல் மதுரையில் தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக தக்காளி விலை குறைந்து வருகிறது.
கடந்த வாரம் 200 ரூபாயை தொட்ட தக்காளி விலை தற்போது படிப்படியாக குறைந்து கோயம்பேடு மார்க்கெட்டில் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக தக்காளியை வாங்கும் வியாபாரிகள் குட்டியானை வாகனத்தில் வைத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். அதில் இரண்டு கிலோ 100ரூபாய்க்கும், ஒரு கிலோ 60ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து சற்று அதிகரித்ததால் விலை குறைந்தாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.