ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீரால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அப்பகுதிகளில் ஏற்கனவே பரிசல்கள் இயக்க தடை விதித்திருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து ஒகேனக்கலில் மாவட்ட நிர்வாகம் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், ஆற்றில் இறங்கவோ, அருவிகளில் குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுக்கு வந்து சேர்ந்தது . இதனால் தற்போது ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது . இதனால் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது .
காவிரி ஆற்றில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லில் மிகவும் பேமஸ் ஆக பார்க்கப்படும் பரிசல் சவ்வாரிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது .