திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் ஆனந்தி திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மணிகண்டன், ஆனந்தி படிக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு வந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 2-வது மாடியில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு முடிந்து, கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆனந்தி திடீரென்று 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் 3-வது மாடியில் இருந்து ரோட்டில் விழுந்த பார்த்து மணிகண்டன் கதறி துடித்தபடி கீழே ஓடிச்சென்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்தலை மற்றும் இடுப்பு பகுதியில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் சென்று விசாரணை நடத்தினார்கள்.
காங்கேயத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அந்த இளைஞன் பயிற்சி மையத்திற்கு சென்று மாணவியுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், இதனை நேரில் பார்த்து கண்டித்ததால், மாணவி தன் கண்முன்னே மாடியில் இருந்து குதித்ததாகவும் அவரது தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி இன்று உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.