திருச்சி அருகே, இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இளைஞர் வாழ்த்து தெரிவித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருத்தலையூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் (17வயது) வாலிபர். இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வருகிறார்.
யுவபாரதி என்ற மாணவி கண்ணனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கண்ணனூரில் இருவரும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதை அறிந்த யுவபாரதியின் தாய் திருத்தலையூர் கிராமத்திற்கு தனது உறவினர்களுடன் நேரில் சென்று அங்குள்ள கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில், தன் மகள் படிக்க வேண்டும் அவளை தொந்தரவு செய்து அவள் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என கூறி பைசல் செய்துள்ளார். இதற்கு அந்த வாலிபரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களாக யுவபாரதியை அந்த வாலிபர் எவ்வித தொந்தரவும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி யுவபாரதி பிறந்த நாளை முன்னிட்டு அந்த வாலிபர் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியில் பெண்ணுடன் தான் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படம் வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த படத்தை யுவபாரதியின் உறவினர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, யுவபாரதியுடன் அவரது தாய் மற்றும் உறவினர்கள் விசாரித்துள்ளனர்.வாலிபர் வெளியிட்ட படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி மறுத்த யுவபாரதி தாயிடம் கதறி அழுதுள்ளார்.
நாங்கள் விசாரித்து வருகிறோம் நீ வீட்டில் இரு என கூறிவிட்டு தாய் சுபாசினி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த யுவபாரதி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உயிருக்கு போராடிய யுவபாரதியை மீட்டு தாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த யுவபாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சுபாஷினி தனது மகள் மரணத்திற்கு காரணமான வாலிபர் மீதும் அவரது பெற்றோர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் யுவபாரதியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனை சவகிடங்கிற்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து மேல்விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மாணவி யுவபாரதி இறந்து போன தகவல் தெரிந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள நிலையில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.