இலங்கை திரிகோணமலையில் (Trincomalee) முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் பிரதானமானது ஜல்லிக்கட்டு போட்டி. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ‘ஏறு தழுவல்’ என்றும் அழைப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தைப்பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான்.
அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களில் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள விளையாட்டாகும்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தைத்திங்கள் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, மதுரையின் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
தைப்பொங்கல் நெருங்க நெருங்க காளைகளும், மாடுபிடி வீரர்களும் வாடிவாசலில் இறங்கும் நாளை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/15-people-have-been-injured-so-far-in-the-jallikattu-competition-in-pudukottai-district/
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும் 297 மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று திரிகோணமலை (Trincomalee) சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை செந்தில் தொண்டமான் மற்றும் மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு மின்விசிறி, ரைஸ் குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு திருச்சி வந்த போது இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.