சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்கள் பல வென்று கலக்கி வருகின்றனர் .
அந்தவகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்று நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் 55.42 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்தியாவின் தங்கமங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராமராஜ் அவர்கள் சமன் செய்திருப்பதும் பாராட்டுதலுக்குரியது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறுவயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்டு பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் வித்யா ராமராஜ், அடுத்தடுத்து உலகளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாட்டில் உச்சம் தொட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.