கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 30 தொடங்கியது.
தொடர்ந்து வரும் 4-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சை வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அத்துடன் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், பணம் பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில்15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மையமும், ஓரிரு மண்டலங்களுக்கு மட்டும் 2 மையங்கள் என 15 முதல் 20 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.