தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் நிறுவனத்தில் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 15 ml நெய்யின் விலை 14 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் , 100 ml நெய்யின் விலை 70 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், 100 ml நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் நெய்யின் விலை 630 ரூபாயிலிருந்து 700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் வெண்ணெய்யின் விலையானது 100 கிராம் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், 500 கிராம் 260 ரூபாயிலிருந்து 275 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவின் பொருட்களின் விலையுயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறிருப்பதாவது :
அத்தியாவசிய பால் பொருட்களில் விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தியிருக்கிறது ஆவின் நிறுவனம். நடுத்தர குடும்பங்களை பெரிதும் பாதிக்கும் இந்த விலை உயர்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தனியார் பால் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக அரசு நிறுவனமான ஆவின் தன் விலை உயர்வை அறிவித்திருக்கிறதோ எனும் சந்தேகம் எழுகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆவின் விலை உயர்வை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விலையுயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.