மாமன்னன் படத்தின் வில்லன் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த திரைப்படம் மாமன்னன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
உதயநிதியின் கடைசிப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த திரைப்படம் கடந்த ஜூன் 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தபடம் சமூக நீதி மற்றும் சமத்துவம் பற்றி நேர்த்தியாக அரசியல் பேசிய படம் என மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்த நிலையில் மாமன்னன் படத்தின் வில்லன் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமன்னன் படத்தில் சாதி வெறி பிடித்த வில்லன் கதாபாத்திரமான ரத்னவேலு என்கிற கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருந்தார்.
தற்போது அந்த கொடூர வில்லன் கதாபாத்திரத்தை ஹீரோ போல் சித்தரித்து அதுக்கு விதவிதமான பாடல்களை போட்டு இணையத்தில் பதிவிடப்படும் மீம்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததிலிருந்து சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு, என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள். அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர்.

இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர். அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப்பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான்.
ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.