வேளாங்கண்ணி பேராலய தேர்பவனியை முன்னிட்டு வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடத்தப்பட்டு தேர்பவனி நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுகான திருவிழா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் முன்னிலையில் புனித கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதி இரவு தேர்பவனியும், 8ம் தேதி மாதா பிறந்தநாள் விழா நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள் என்பதால் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வேளாங்கண்ணி பேராலய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது. தேர்பவனியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி வந்துள்ளனர்.
இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8-ந் தேதி ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவை முன்னிட்ட செப்டம்பர் 8ம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.