கந்து வட்டி கும்பலை ஒழித்துக் கட்ட தமிழ்நாடு அரசு உடனே கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் ( Sivakasi ) என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கந்து வட்டி கொடுமையால், கடந்த 15 நாட்களில் மட்டும் ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் கந்து வட்டி கும்பலிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.
இந்தக் கடனை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்தும், மிரட்டியும் வந்ததால், தனது மனைவி, மகள், மகன் மற்றும் பேத்தியைக் கொலை செய்து விட்டு, லிங்கம் 22.05.2024 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு, மிரட்டலால் தான் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவித்து இருந்தார்.
அப்போதே லிங்கம் குறிப்பிட்டிருந்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று ஐந்து பேர் உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.
மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான ஜெயச்சந்திரன்- ஞானபிரகாசி தம்பதியினர் தங்களின் மகள் மற்றும் மகனின் கல்விச் செலவுக்காகவும், குடும்பச் செலவுக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதி கிராமத்திலுள்ள சிலரிடம் ரூபாய் 4 லட்சம் வரை கடன் தொகை வட்டிக்கு பெற்றதாக கூறப்படுகிறது.
நீண்ட காலமாக தாங்கள் பெற்ற கடனுடன் அதிகமான வட்டித் தொகையை கட்ட முடியாமல் தம்பதியினர் தவித்து வந்துள்ளனர்.
ஜெயச்சந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில் கந்து வட்டி கொடுத்தவர்கள் தகாத முறையில் திட்டியும், விபச்சாரம் செய்தாவது பணத்தைக் கொடுக்குமாறு தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானபிரகாசி, தனது மகள் சர்மிளாவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டு வாரத்திற்கு முன்பு குமார் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து, பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ளதால் தற்சமயம் நம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்காரர்கள் யாரும் 05.06.2024 முதல் 05.07.2024 வரை கடன் வசூலிக்க வர வேண்டாம் என தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் என்று மீனம்பட்டி கிராம பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
மீனம்பட்டி கிராமத்தில் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பட்டாசு தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். பட்டாசு தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் இவர்களுக்கு கிடையாது. பட்டாசு ஆலைகளை நான்கு மாத காலமாக அரசு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை ஒப்படைக்காதவர்களுக்கு சுய உதவிக் குழுக்காரர்கள் நெருக்கடி கொடுப்பது, இரவு முழுவதும் அவர்கள் வீட்டிற்கு முன் அமர்ந்து கொள்வது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற காரணங்களால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதை ஈடுகட்ட வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
நான்கு மாதம் வேலை இல்லாமல் வார வட்டி, மாத வட்டி, மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் கந்து வட்டி கட்டுவதற்கு கையில் பணம் இல்லாமல், மீனம்பட்டி மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமல், குழுக்காரர்களும் கந்து வட்டிக்காரர்களும் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மகளிர் சுய உதவி குழுக்காரர்கள், கந்து வட்டிக்காரர்கள் செய்யும் கொடுமைகளுக்கு எதிராக பேசுவதற்கே மக்கள் தயங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக பேசினால் அடுத்து அவர்களிடம் கடன் வாங்க முடியாது என்று பயப்படுகிறார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுக்களிடமும் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு கடனை கட்ட முடியாமல் தற்கொலையை நோக்கி மக்களைத் தள்ளப்படுகின்றனர்.
கந்து வட்டி கும்பல் மற்றும் குழுக்காரர்கள் கொடுக்கும் நெருக்கடி, கொலை மிரட்டல்களை தாங்க முடியாமல் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கிறது. இந்த குற்றச்செயல்களுக்கு சில பட்டாசு ஆலை முதலாளிகளும், அரசு அதிகாரிகள் சிலரும் துணை போவதாக கூறப்படுகிறது.
எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், அத்துமீறி செயல்படும் கந்து வட்டி கும்பலை ஒழித்துக் ( Sivakasi ) கட்டவும், தமிழ்நாடு அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.