சென்னை மட்டுமின்றி தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
கடந்த ஒரு வாரமாக சென்னையில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. பசுமை பண்ணை கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என தேமுதிக சார்பில் அறிக்கை மூலம் வலியுறுத்தி இருந்தேன்.
எனது அறிக்கைக்கு செவி சாய்த்து தற்போது சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை மனதார வரவேற்கிறேன்.
அதேசமயம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளியின் பற்றாக்குறையை போக்கி அதன் விலையை குறைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.