ஆந்திர மாநிலத்தில், தங்கள் ஊர்க்கார பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்ததால், திருமணத்திற்குப் பிறகு, சொந்த ஊருக்கு வந்த பெண்ணை கர்ப்பிணி (pregnancy) என்றும் பார்க்காமல் நடுத்தெருவில் வைத்துத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த பழைய வீராபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ ஹரி. இவரும், வேறு பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
காதலர்கள் இருவரும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்தை ரகசியமாகவே வைத்திருந்தனர்.
ஆனால், இவர்களது காதல் விவகாரம், இவர்களது பெற்றோர்களுக்குத் தெரியவந்தது. இந்நிலையில், அவர்களது பெற்றோர் பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர்.
இதையடுத்து, திருமணம் முடிந்து தனது மாமியார் வீட்டில் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், லீலாவதி கர்ப்பமாக இருந்துள்ளார்.
இதனால், மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த ஸ்ரீ ஹரி குடும்பத்தினர் அவர்களது வீட்டில் லீலாவை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொண்டனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல விரும்பிய லீலா, இது குறித்து கணவரிடம் கூறியுள்ளார்.
மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ ஹரியும், லீலாவும் சேர்ந்து லீலாவின் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
தாய் வீட்டிற்கு லீலா வந்திருப்பதை அறிந்த கிராமத்தினர், அவரது வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர், வேறு சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்ட லீலாவை கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர்.
மேலும், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை லீலா திருமணம் செய்துகொண்டதால், தங்கள் சமூகத்தின் விதிகளை மீறியதாகவும், அதனால் லீலாவின் குடும்பம் கிராமத்திற்கு அபராதம் செலுத்தும்படியும் அந்த கிராமத்தினர் ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அபராதத் தொகையை 2 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஆனால், லீலாவின் குடும்பம் வறுமையானது என்பதால், அவர்களால் அந்த தொகையைச் செலுத்த முடியவில்லை.
எனவே, இது குறித்து கிராம மக்களிடம் முறையிட்டனர். இருப்பினும், அவர்களது பேச்சைக் கேட்காத கிராமத்தினர், லீலாவின் குடும்பத்தினரை வசைபாடியுள்ளனர்.
இதனால், அங்கே ஏற்பட்ட தகராற்றில், லீலா மற்றும் அவரது கணவரை அந்த ஊர் மக்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் கர்ப்பிணி என்றும் கூட பாராமல் நடுத்தெருவில் இழுத்து வந்து லீலாவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே லீலாவின் கர்ப்பம் (pregnancy) கலைந்துள்ளது. இதையடுத்து லீலாவை மீட்ட அவரது உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து லீலாவின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கிராமத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.