திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 500- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங். இவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர் . மாணவிகளின் கதறலை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாச்சியர் பாலசுந்தரம் உள்பட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
இதையடுத்து குற்றம்சாப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை உடனே கைது செய்வதாக போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் சமாதனம் அடைந்த பள்ளி வாசலில் காத்திருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் இணைந்து உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொன்சிங் மீது போக்ஸோ வழக்கும் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.