மணிப்பூரில் போராட்டக்காரர்கள் பெண்களை நிர்வாணமாக்கி விவசாய நிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர செயலுக்கு வி.கே.சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று விவசாய நிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக வீடியோ ஒன்று தற்போது வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இது யாராலும் சகித்துக்கொள்ளமுடியாத ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். இதுபோன்ற வன்செயல்கள் தடைபெறாத வகையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய கடமை மணிப்பூர் அரசிற்கு உள்ளது. மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களாக நடந்துவரும் பிரச்னைகளுக்கு நிரந்தச தீர்வு காண வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மணிப்பூரில் மைத்தேயி சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
பல ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் இதில் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், சுமார்135 நபர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதகாலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி நாட்டையே உலுக்கியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களை இந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறவர்கள் மனிதாபிமானமற்ற அரக்கர்களாகத்தான் இருக்கமுடியும். இதுபோன்று இழிசெயல்களில் ஈடுபடுபவர்கள் தன்னை பெற்றெடுத்தவரும் ஒரு பெண் தானே என்பதை ஏன் மறந்து போனார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
மணிப்பூரில் நடந்துவரும் போராட்டங்களை கட்டுப்படுத்தவும், அமைதியான சூழலை உருவாக்கிடவும்,அங்கு வாழும் அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடவும் மணிப்பூர் அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பிரச்னைகளுக்கு ஒரு சுமூகமான, நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார் .