இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலி 7 மணி முதல் துவங்கியது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வாக்கை செலுத்தினார். குடும்பத்துடன் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நடிகர் ரஜினி காந்த் சென்னை ஸ்டெலா்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து வாக்களித்தார் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,“கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.