தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி மாணவர்கள் கறுப்பு நிற உடை அணிந்து வர தடை விதிக்கப்படுவதாக சுற்றறிக்கை ஒன்றை பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.
பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தலின்படி சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாங்கள் அப்படி எந்த ஒரு அறிவுறுத்தலையும் யாருக்கும் கொடுக்கவில்லை என சேலம் மாவட்ட காவல்துறை தரப்பில் அறிக்கை மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் கூறியதாவது :
பார்வையில் கண்ட தங்கள் கற்றறிக்கையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அழிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகம் சேலம் மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அமைந்துள்ளது. எனவே, மேற்படி இடத்தில் நடைபெறும் விழாவில் பங்குபெறுபவர்கள் கடைபிடிக்க வேண்டியது குறித்து சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.