தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நாளை மறுநாள் வரையிலும் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், ஏப்ரல் 30-ஆம் தேதி மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு புதுச்சேரியில் பல மாவட்டங்களில் கன மழை (heavy rain) பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கன மழை பெய்யும் மாவட்டங்களின் பட்டியல் குறித்தும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில், தற்போது கோடை மழை தமிழ்நாட்டின் பல இடங்களில் பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் ஓரளவு விடுபட்டுள்ளனர். மேலும், இன்றும் காலை முதல் தமிழ்நாட்டின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்து குளுமையான சூழல் நிலவியது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வானிலை மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, ஏப்ரல் 30ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை (heavy rain) பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, மே மாதம் 1ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.