வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பணியில் தனிநபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது . விடாது பெய்த பேய் மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
இந்நிலையில் மிக்ஜாம் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் தற்போது முழு வீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது . வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகல் பார்க்காமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும். அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கீழ்க்காணும் அலுவலர்களின் வாட்ஸ்அப் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அலுவலர் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் விவரம்
- திரு. ஷேக் மன்சூர், உதவி ஆணையர் – 9791149789
- திரு. பாபு, உதவி ஆணையர் – 9445461712
- திரு. சுப்புராஜ், உதவி ஆணையர் – 9895440669
- பொது – 7397766651