மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் உடை பெரும்பாலும் பச்சை (green) நிறத்திலும், நோயாளிகளுக்கு தரப்படும் அங்கியும் அதே பச்சை வண்ணத்திலும் இருப்பதற்கான காரணம் என்பது தெரியுமா..?
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களின் உடை மட்டுமல்லாது சுவர், மெத்தை விரிப்பு, தலையணை, ஸ்கிரீன் போன்றவையும் வெள்ளை நிறத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தது.
அடர் சிவப்பு நிறம் நிறைந்த படத்தை ஒரு நிமிடம் உற்றுப் பாருங்கள். பின்னர், உடனே வெள்ளை நிறம் அதிகம் உள்ள படங்களை பாருங்கள். வெள்ளை நிறத்தில் பச்சை அல்லது நீல பச்சை நிறம் தெரியும்.
இது வெறும் மாயை இல்லை. இதற்கு பின்னால், உள்ள அறிவியல் தான் மருத்துவமனைகளில் பச்சை நிறம் உபயோகிக்க காரணம். ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யும் போது நீண்ட நேரம் நோயாளியின் உடலை கையாள்வதால் ரத்தத்தின் நிறமான சிவப்பு நிறத்தை அதிக நேரம் உற்றுப் பார்க்க நேரிடும்.
இதன் காரணமாக, கண்ணில் உள்ள வண்ண பார்வைக்கு காரணமான கூம்பு வடிவ செல்கள் உணர்விழக்க ஆரம்பித்து மூளையின் சிவப்பு நிற சமிங்கை மங்க ஆரம்பிக்கும். இதனால், மருத்துவரால் சிவப்பு நிறத்தின் வகைகளை இனம் காண முடியாமல் போய் மனித உடலின் நுணுக்கங்களை காண்பது கடினமாக இருக்கும்.
இதனால், அவர் தன் பார்வைக்கு புத்துணர்வு தர வேண்டி சுற்றுப்புற வெள்ளை நிறத்தை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். உடனே, அவர் தன் பார்வையை திருப்பினால் நோயாளியின் சிவப்பு நிற உறுப்புகள் அனைத்தும் பச்சை (green) நிறமாக தெரியும்.
வெள்ளை ஒளியில் வானவில்லின் அனைத்து வண்ணங்களும் இருப்பதாலும், வண்ணப்பார்வையில் சிவப்பு ஏற்கனவே தீர்ந்து விட்டதாலும், மூளை பச்சை சிக்னலை தூண்டிவிட்டு பச்சை நிறமாக காட்டுகிறது. வண்ணச் சக்கரத்தில் சிவப்புக்கு எதிரான வண்ணம் பச்சை என்பதால் இந்த நிலை ஏற்படுகிறது.
இதனால் ஏற்படும், கண் அயர்வை தடுப்பதற்காகவே மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் பயன்பாட்டில் உள்ள வெள்ளை நிறத்திற்கு பதிலாக பச்சை, இளம் பச்சை மற்றும் நீல பச்சை நிறங்களை பயன்படுத்த தொடங்கினர்.
இந்த ஏற்பாடு 1917 களில் தொடங்கி இரண்டாம் உலகப்போருக்கு பின் பரவலாகியது. அது மட்டுமல்லாமல், பச்சை நிறம் இயற்கை நிறமாகவும், நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதால் நோயாளியின் மனதிற்கு அமைதியையும் ஆறுதலையும் தரும்.
எனவே தான், மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உடை பச்சை வண்ணத்தில் உள்ளது.