மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகியுள்ளதாகவும் . இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகியுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (6.8.2024) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் 5-வது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
சமூக மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். இனியும், கொண்டுவர இருக்கிறோம்.
மாநிலத்திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன்முதலாக அமைத்தவர் தலைவர் கலைஞர். ஒன்றியத்தில் இருப்பதை போல, மாநிலத்திற்கும் திட்டக்குழு அமைக்க காரணம், அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான்.
Also Read : பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி..!!
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளரவேண்டும் என்பது தான் வளர்ச்சி. அதை தான், பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் விரும்பிய வளர்ச்சி
ஆட்சி சக்கரத்தை திமுக நடத்தினாலும், எங்களின் முக்கிய வழிகாட்டி மாநிலத் திட்டக்குழு தான். திமுக ஆட்சியின் நிறை, குறைகளை எடுத்துச்சொல்வது மாநிலத் திட்டக்குழு. திட்டக்குழுவின் அறிக்கை தான் திமுக அரசு பெற்ற மதிப்பெண் பட்டியலாக நினைக்கிறேன்.
‘காலை உணவு’ திட்டம், ‘மக்களை தேடி மருத்துவம்’ உள்ளிட்ட திட்டங்களால் தமிழ்நாடு மக்கள் பெற்றுள்ள வளர்ச்சியை திட்டக்குழுவின் அறிக்கை மூலம் தெரிந்து கொண்டோம்.
திமுக அரசின் திட்டங்கள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்த அமைந்துள்ளது.
‘காலை உணவு’ திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என்பதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு இருக்க முடியாது.
மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகியுள்ளது. இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகியுள்ளது.
‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
கவனம் பெறாத துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.