தமிழகத்தை தற்போது ஆளும் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் படி மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதல் 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது .
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இதையடுத்து விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது .
முதற்கட்டமாக 20.765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நியாய விலைக் கடை பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக விண்ணப்பங்களையும், டோக்கன்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்களில் முதல் மூன்று நாட்களில், 26.07.2023, மாலை 6.00 மணி வரை 36,06,974 விண்ணப்பங்கள் இணையதளம் வழி பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு 34.350 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் இருக்கும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பம் பதிவு செய்ய தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .