சேலத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி (dowry abuse) பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம், ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி நைனாகாடு பங்களா தோட்டம் பகுதியில், வசித்து வருபவர் சேர்ந்தவர் ரவி. இவருக்கு 26 வயதில் அனுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில், அனுஸ்ரீவிற்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பொன் கவுதம் நந்தா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதையடுத்து, இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், அனுஸ்ரீயிடம் குழந்தை இல்லாததை காரணம் காட்டியும், வரதட்சனை (dowry abuse) கேட்டும் கணவர் பொன் கவுதம் நந்தா மற்றும் மாமனார் தங்கராஜ், மாமியார் அருள்மணி ஆகியோர் துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, அனுஸ்ரீ தீவட்டிப்பட்டி பங்களா தோட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், அவர் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, கடந்த மாதம் 23-ந் தேதி வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் அனுஸ்ரீ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அனுஸ்ரீயின் தந்தை ரவி இதுகுறித்து, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், இதுபற்றி தகவல் அறிந்த அனுஸ்ரீயின் கணவர், மாமியார், மாமனார் ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர்.
மேலும், அனுஸ்ரீயின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, அனுஸ்ரீயின் கணவர் பொன் கவுதம் நந்தா, மாமனார் தங்கராஜ், மாமியார் அருள்மணி ஆகியோர் மீது பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வந்தனர்.
இதனையடுத்து, நேற்று அனுஸ்ரீயின் கணவர் பொன் கவுதம் நந்தாவை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.