சென்னையில் அருகே பிரியாணிக்காக ஏற்பட்ட தகராறில் 22 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை , அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை டாஸ்மாக்கில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் என்ற இளைஞர் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, அருகில் உள்ள பிரியாணி கடையில் உணவு ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் மது அருந்திய அதே டாஸ்மாக்கில் 4 பேர் கொண்ட மற்றொரு கும்பலும் போதை தலைக்கேற குடித்துவிட்டு அதே பிரியாணி கடையில் உணவு ஆர்டர் செய்துள்ளனர்.
இந்நிலையில் பாலசந்தர் ஆர்டர் செய்த உணவு முதலில் வழங்கப்பட்டதால் கடை ஊழியர்களிடம் அந்த மர்ம கும்பல் தகராறு செய்துள்ளது இதனை கண்டு ஆத்திரமடைந்த பாலசந்தர் அந்த கும்பலை தட்டிக் கேட்க வாக்குவாதம் கைகலப்பாக மாறியது .
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாலசந்தர் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் எதிர்தரப்பினரை தாக்க பதிலுக்கு அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசந்தரை சரமாரியாக குத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாலசந்தர் அதே இடத்தில் துடிதுடி இறந்துள்ளார் . அனைத்தும் முடிந்த பிறகு தகவல் அறிந்து வந்த போலீஸார் பாலச்சந்தரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .
இதையடுத்து அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய முகப்பேரைச் சேர்ந்த சங்கர் மற்றும் பெரம்பூர் அஜீத், அயனாவரம் நெப்போலியன், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தலைக்கேறிய மது போதையில் ஒரு பிரியாணிக்காக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .