வீலிங் செய்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார்.
தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த விபத்தின் வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனங்களும் வலுத்தன.
இந்த நிலையில் அச்சுறுத்தும் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த பாலுசெட்டிசத்திரம் போலீஸார் செப்டம்பர் 19ம் தேதி அவரை கைது செய்தனர்.
பின்னர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஎஃப் வாசன், 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் தேய்த்தார். இந்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது யூ டியூபில் 45 லட்சம் லட்சம் பேர், மனுதாரரை பின் தொடர்கிறார்கள் என்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம்.
ஆனால் இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை கேட்டு வாங்கி, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள் என காவல்துறை தரப்பில், தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும்.
அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி கருத்து தெரிவித்தார்.