இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ இன்று தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐபிஓ வெளியிட்ட பின்பு சோமேட்டோ நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் என்பதால் முதலீட்டாளர்கள் மட்டும் அன்றி முதலீட்டுச் சந்தையின் அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
சோமேட்டோ நிறுவனம் ஜூன் காலாண்டில் ஆப்ரேஷனல் வருவாய் அளவீட்டில் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 22 சதவீதம் வளர்ச்சி அடைந்து 844 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இதேவேளையில் சோமேட்டோ நிறுவனத்தின் நஷ்ட அளவீடு 168 சதவீதம் வரையில் உயர்ந்து 360 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜூன் காலாண்டில் சோமேட்டோ பெற்ற 844 கோடி ரூபாய் வருமானத்தில் 806 கோடி ரூபாய் இந்தியாவில் இருந்தும், ஐக்கிய அரபு நாடுகளில் 31 கோடி ரூபாயும், பிற நாட்டுச் சந்தைகளில் இருந்து எஞ்சியுள்ள 7 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது
மேலும் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் டெலிவரி சார்ஜ் ஆகியவற்றைச் சேர்த்தால் 1,160 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று உள்ளது இது கடந்த காலாண்டில் 920 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா காலத்தில் பாதிப்பு இல்லாமல் சோமேட்டோ-வின் வர்த்தகம் உயர்ந்து வருகிறது.
இதன் மூலம் சோமேட்டோ நஷ்டத்தைச் சந்தித்திருந்தாலும் இந்நிறுவன பங்குகள் சுமார் 5.52 சதவீதம் வளர்ச்சி அடைந்து 131.85 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 132.60 ரூபாய் வரையில் உயர்ந்து பங்குச்சந்தையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது.