தமிழ் நாடு மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான குறுக்கீடுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக யானைகள் – மனிதன் மோதல் காரணமாக இரண்டு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான மோதல்களுக்கு பெரும்பாலும் காடுகள் ஆக்கிரமிக்கப் பாடுவதே பெரும் குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.
யானைகள் – மனிதன் மோதலை தடுப்பதற்காக யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறது. தமிழ்நாட்டில் வால்பாறை மற்றும் சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு இரு தரப்பு உயிரிழப்பும் பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கேரளா, கர்நாடகா போல சத்தீஸ்கர் மாநிலத்திலும் யானைகள் – மனிதன் மோதல் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இங்கு விவசாய செய்கை அதிகமாக காணப்படுவதாலும் காட்டை ஒட்டிய பகுதி என்பதாலும் பாதிப்புக்கள் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் யானை – மனிதன் மோதலை கட்டுப்படுத்த அம்மாநில வனத்துறையினர் பல நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் புதிதாக ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் வனத்துறையினர். பெரும்பாலும் யானைகள் உணவைத் தேடியே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகிறது.
இதனை கட்டுப்படுத்த காட்டை அண்டிய பகுதிகளில் இருக்கும் வனத்துறையினருக்கு சொந்தமான இடங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் யானைகள் தமக்கு தேவையான உணவை சாப்பிட்ட பின்பு மீண்டும் வனப்பகுதிக்கே திரும்பி சென்றுவிடும் என்பது வனத்துறையினரின் யோசனையாக உள்ளது. இதனை அம்மாநிலத்தின் சில பகுதிகளில் செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளனர் வனத்துறையினர்.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பலோட் ராய்கர், சூரஜ்பூர், மஹாசமுந்த், தம்தாரி, காரியாபாத், பல்ராம்பூர், காக்கர்,சர்குஜா, கோர்பா, மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் யானை -மனிதன் மோதலில் 204 பேர் பலியாகியதோடு 45 யானைகளும் உயிரிழந்துள்ளதாக அண்மையில் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.