வடுகபட்டி பூண்டு சந்தை பின்னணி
கடந்த சில நாட்களாக பூண்டு விலை உச்சம் தொட்டுள்ளது. அந்த வகையில், வடுகபட்டி சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நிலவரப்படி முதல்ரகம் ரூ.550, இரண்டாம் ரகம் ரூ.400, மூன்றாம் ரகம் ரூ.300 என விற்பனையாகின.
கடந்த மாதத்தை விட சுமார் ரூ.200 வரை பூண்டு விலை அதிகரித்துள்ளது. இதயநோய், வாயுக்கோளாறு,
மூட்டுவலி உள்ளிட்டவற்றுக்கு பெரும் நிவாரணியாக விளங்குவதனால் கரோனாவுக்குப் பிறகு பூண்டின் பயன்பாடு உலக அளவில் வெகுவாக அதிகரித்துள்ளது.
பூண்டு வியாபாரத்தில் முதன்மையாக விளங்கும் வடுகபட்டி பூண்டு சந்தை பின்னணி என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் தான் தமிழக அளவிலான மிகப்பெரிய பூண்டு சந்தை உள்ளது.
பொதுவாக ஒவ்வொரு பகுதிகளிளும், உள்ளூரில் விளைவிக்கும் பொருட்கள் தான் முன்னிலை படுத்தப்பட்டு வர்த்தகம் நடைபெறும்.
எடுத்துக்காட்டாக போடி ஏலக்காய், ஈரோடு மஞ்சள், ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா, ஊத்துக்குளி வெண்ணைய் ஆகியவற்றை கூறலாம்.
ஆனால், வடுகபட்டியில் பூண்டு விவசாயமே இல்லை. ஆனாலும், தமிழக அளவிலான பூண்டு வர்த்தகத்தை நிர்ணயிப்பதில் இச்சந்தை முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதற்கு என்ன காரணம்..? வடுக்கப்பட்டிக்கு அருகில் உள்ள கொடைக்கானல் மலையில் வில்பட்டி, பூம்பாறை, கூக்கால்,
மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரியமாகவே மலைப்பூண்டு விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் திருவிழாக்களுக்கு வந்த விவசாயிகள் பண்டமாற்று முறையில் பூண்டுகளை கொடுத்துவிட்டு அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
இதனால் வடுக்கப்பட்டியில் பூண்டு வியாபாரம் அதிகாரிக்க தொடங்கியது. இதனால் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள வடுகபட்டியில் வியாபாரிகள் மலைப்பூண்டு கொள்முதலில் ஆர்வம் காட்டினர்.
அதுமட்டுமல்லாமல் பூண்டு விவசாயத்துக்கு விதைப்பு முதல் அறுவடை வரை குளிர் பருவநிலை அவசியம். ஆனால் அதன்பிறகு உலர வைக்க வெப்பம் தேவைப்படும்.
இப்பருவம் வடுகபட்டியில் இருந்ததால் மலையில் விளைந்த பூண்டுகளைத் தரைப் பகுதியான வடுகபட்டிக்கு கொண்டு வந்து, அங்கு வைத்து உலர்த்தி, புடைத்து கழிவுகளை நீக்கி வியாபாரிகள் விற்பனை செய்யத்தொடங்கினர்.
இப்படி வடுக்கப்பட்டியில் பூண்டு வர்த்தகம் அதிகரித்ததால் கடந்த தலைமுறையினர் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத்,
இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பூண்டினை கொள்முதல் செய்ய ஆரம்பித்தனர்.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது தமிழக அளவிலான பூண்டுச்சந்தையில் வடுகபட்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
பூண்டில் பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், வைட்டமின் ஏ, சி, இ உள்ளிட்டவை உள்ளது. மேலும், இதில் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ‘ஆலிசின்’ என்ற வேதிப் பொருளும் உள்ளது.
பூண்டில் ராஜாளி, பர்வி, காடி என்ற மூன்று வகை பூண்டுகள் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதில் முதல் ரகம் (ராஜாளி) கொடைக்கானல் மலைப்பூண்டு. இது பழுப்பு நிறத்துடன் மணம் நிறைந்து இருக்கும்.
இரண்டாம் ரகம் (பர்வி) ஊட்டி பூண்டு. மூன்றாம் ரகம் (காடி) ராஜஸ்தான், ஹிமாச்சல், உத்தரபிரதேசம், காஷ்மீர், சீனா உள்ளிட்ட பகுதிகளில் விளையும் பூண்டுகள்.