இளைஞரணி மாநாடு : நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
‘எல்லாருக்கும் எல்லாம்’ என்கிற இலட்சியத்தைக் கொண்டுள்ள நமது திராவிட மாடல் அரசின் சார்பில்,
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
பொங்கல் நன்னாளில் ஏழை -எளியோர் புத்தாடை உடுத்திட ஏதுவாகவும், நெசவாளர்களின் வாட்டம் போக்கிடும் செயலாகவும் வேட்டி – சேலைகள் பல ஆண்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில்,
இந்த ஆண்டு தாமதப்படுத்தாமல் பொங்கல் நேரத்திலேயே வழங்கியது திராவிட மாடல் அரசு.
கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம். இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில்,
ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது,
சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,
1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார்.
அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.
சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு,
ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாண்புமிகு இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார்.
https://x.com/arivalayam/status/1747886705531838478?s=20
இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டிய இளைஞரணி நிர்வாகிகள்,
இன்று காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரேந்தித் தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இளைஞரணியின் 25-ஆம் ஆண்டினையொட்டி 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது,
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம்.
தம்பிஉதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர்.
மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்.