பொங்கல் விழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை அரங்கேறியது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் :
முதலில் சிவபெருமான், மன்னன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எல்லாம் வல்ல சித்தராக உருமாறி மதுரைக்கு வந்தார்.
அப்போது அவரது சித்துகளைக் கேள்விபட்ட மன்னன் சித்தரை அழைத்துவர அமைச்சர்களை அனுப்பினார். அனால், அவர்களுடன் வரமறுத்த சித்தர், மன்னனே தன்னை பார்க்க இங்கு வர வேண்டும் என அமைச்சர்களை திருப்பி அனுப்பினார்.
அதன் பிறகு அரசனே சித்தரை காண சென்று தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு சித்தர், தான் காசியிலிருந்து வருவதாகவும்,
தனக்கு ஒன்றும் தேவையில்லை, வேண்டுமானால் அரசன் வேண்டுவதை கேட்டுப் பெறலாம் என்று கூறினார்.
அப்போது அரசனோ, சித்தரை சோதிக்க அருகில் கரும்பு வைத்திருந்த ஒருவரிடம் வாங்கி, இக்கரும்பை இந்திர விமானத்தை தாங்கும் கல் யானை உண்ணும்படி செய்ய வேண்டும் என்று கூறினார்.
அவ்வாறே சித்தர் கல் யானையை பார்க்க அக்கல்யானைக்கு உயிர்வந்து மன்னன் வழங்கிய கரும்பை தின்றது. அத்துடன் மன்னன் அணிந்திருந்த முத்து மாலையையும் பிடுங்கி உண்டது.
இதனால் அரசனுக்கு கோபம் வந்தது, அதனால் சித்தரை தாக்க சென்ற காவலர்கள் சிலையாகினர். இதனை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு பிள்ளை வரம் வேண்டினான். அதன்படி சித்தர் வரம் அளித்து மறைந்தார்.
அதன் பின்னர் மன்னன் அபிசேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அவன் பல கலை கற்று சிறந்து விளங்கினான்.
https://x.com/ITamilTVNews/status/1746074776891007334?s=20
அபிசேகப் பாண்டியன் தன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார். இந்தத் திருவிளையாடலை விளக்கும் வகையில், கல் யானைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை கோயிலில் நடைபெற்றது.
இறுதியாக பூதவாகனத்தில் பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரர், அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினர்.