அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அயோத்தி நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் காட்சி அளிக்கிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கி 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று 7ஆவது நாள் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். டெல்லியில் இருந்து புறப்படும் அவர், காலை 10.25 மணி அளவில் அயோத்தி விமான நிலையம் சென்றடைகிறார்.
அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் 10.55 மணிக்கு விழா நடைபெறும் ராமஜென்ம பூமிக்கு செல்கிறார். காலை 11 மணி அளவில் ராமர் கோயிலுக்குள் சென்று, அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்கிறார்.
நண்பகல் 12 மணிக்குப் பிறகு விழாவின் சிகர நிகழ்ச்சியான, ராமர் சிலை பிரதிஷ்டை அபிஜித் முகூர்த்த நேரத்தில் நடைபெறும்.
12.05 மணி முதல் 12.55 மணி வரையிலான நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : January 22nd 2024 : இன்றைய ராசி பலன்!!
இந்த நிலையில், சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் கோவிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது..
“சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன்.
கோயிலின் பூசாரிகள், ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம், மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது.
நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது.
பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” என ஆளுனர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.