மராட்டிய மாநிலம் மும்பை – ஆக்ரா இடையேயான நெடுஞ்சாலையில் லாரி (truck) ஒன்று கடைக்குள் புகுந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையின் ஓரம் உள்ள உணவகத்திற்குள் நுழைந்து ஏற்பட்ட விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு ஷிர்பூர் மற்றும் துலேயில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் இருந்து துலே நோக்கி லாரி (truck) சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. லாரியின் பிரேக் செயலிழந்ததால் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து ஏற்பட்ட சமயத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் இன்னோரு லாரியின் மீது மோதியது. இதையடுத்து லாரி நெடுஞ்சாலையில் இருந்த உணவகம் ஒன்றின் மீது மோதி கவிழ்ந்தது.
லாரி கவிழ்ந்த இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.