புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்(Tamilisai) அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு துணைநிலை ஆளுநரின் பரிந்துரையோடு கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதற்கான ஒப்புதலை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பிரதமர்மோடிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,10 % இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நனவாகும். அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இட ஒதுக்கீட்டிற்காக பணியாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான புதுச்சேரி அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.