கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் குறைந்தததையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடுநிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதற்கிடையே தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, வரும் 10 ஆம் தேதி வரை, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
பொதுத் தேர்வு எழுதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 11 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது;
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 ஆண்டுகளும் தொடர்ந்து பொதுத் தேர்வு எழுதுவதால் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் ஏற்படுகிறது. அத்துடன் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு தயாராக போதுமான காலம் கிடைக்காததால் நடப்பாண்டு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு முதல்வரின் ஒப்புதல் கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.