தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தனியார் தொழிலாளர்களுக்கான 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெறுவதாக (work bill withdrawn) அறிவித்திருக்கும் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னை பல்லவன் இல்ல பணிமனையில் மே தினத்தை கொண்டாடிய திமுக தொழிற்சங்கமான தொமுச தமிழ்நாடு அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. பேட்டி அளித்த தொமுச தொழிற்சங்கத்தின் செயலாளர் சண்முகம், 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றிருப்பது முதலமைச்சரின் தொழிலாளர் நல உணர்வை காட்டுகிறது என்றும் புகழ்ந்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்.. “கழக தலைவர் அவர்களிடம் சென்று இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசி ஒரு முடிவு எடுங்கள் என்று சொன்னார். அதன் அடிப்படையில் எல்லோரும் சேர்ந்து இது வேண்டாம் என்று சொன்னவுடன் சொன்ன உடனேயே கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அதனை திரும்ப பெற்றிருக்கிறார்.
இதில் அவருடைய தொழிலாளர் உணர்வு என்பது மிகவும் போற்றுதலுக்குரியது. அப்படிப்பட்ட முதல்வரின் உடைய ஆட்சியிலே தொழிலாளர்களுக்கு என்றும் நலன்கள் காக்கப்படும். அவர்களுடைய நலன்கள் என்றும் பேணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மே தின பரிசாக 12 மணி நேர வேலை மசோதாவை முதலமைச்சர் திரும்ப பெற்றிருப்பதாக (work bill withdrawn) திராவிடர் கழக தலைவர் கே வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்.. இந்த மாதம்7ம் தேதி தாம்பரத்தில் நடக்கவிருக்கும் திராவிடர் தொழிலாளர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவும் இணைத்து நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
உண்மையான மக்களாட்சி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியாகவே நடைபெறுகிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்று கே வீரமணி பாராட்டி உள்ளார்.