இந்திய நிர்வாகப் பணியில் 1,365 (IAS) காலி பணி இடங்களும், இந்தியக் காவல் பணியில் 703 (IPS) காலி பணி இடங்களும் உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளில் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் காலியிடங்களை நிரப்புவதற்காக சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இதற்காக, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பதவி உயர்வு ஒதுக்கீட்டில் காலியிடங்களை நிரப்புவதற்கு, மாநில அரசுகளுடன் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுக் குழு கூட்டங்கள் நடத்தப்படும்.
இந்நிலையில், கடந்த 2022 வரை ஐஏஎஸ் அதிகாரிகளின் வருடாந்திர சேர்க்கையை சிஎஸ்இ-180 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்திய நிர்வாகப் பணியில் (IAS) 1,365 காலி பணி இடங்களும், இந்தியக் காவல் பணியில் (IPS) 703 காலி பணி இடங்களும் காலியாக உள்ளது.
மேலும், இவை தவிர, இந்திய வனப் பணியில் (IFS) 1,042 காலியிடங்களும், இந்திய வருவாய் சேவையில் (IRS) 301 இடங்களும் காலியாக உள்ளன.
வழக்கமாக காலி பணியிடங்கள் ஏற்படுவதும், அதனை நிரப்புவதும் தொடர் நடவடிக்கையாக உள்ள நிலையில், காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப மத்திய அரசு முயன்று வருகிறது எனவும் கூறி உள்ளார்.