உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 17 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு 15 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 17வது நாளாக இன்றும் நடைபெற்றது. அவர்களுக்கு உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன், உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டு 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நவீன இயந்திரங்கள் கொண்டு சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், குறுகிய விட்டம் கொண்ட சுரங்கங்களைத் தோண்டுவதில் வல்லவர்களான எலிவளை சுரங்கத் தொழிலாளர்களை பயன்படுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான சுரங்கம் தோண்டப்பட்டது.
எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் 80 செ.மீ., அதாவது சுமார் இரண்டரை அடி அகலமுள்ள குழாய் மூலம் உள்ளே சென்று, சுரங்கத்தை மேற்கொண்டு தோண்டினர். தீவிரமாக நடைபெற்ற இந்த பணி தற்போது நிறைவடைந்த நிலையில், NDRF மற்றும் SDRF படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, முதற்கட்டமாக 15 தொழிலாளர்களை ஒவ்வொருவராக சுரங்கத்தினுள் இருந்து மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
சுரங்கத்தின் வெளியே காத்திருந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே உள்ளே இருக்கும் மற்ற 26 தொழிலாளர்களையும் மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரங்க விபத்தில் சிக்கி 17 நாட்கள் தவித்த தொழிலாளர்கள் பத்திரமாக உயிருக்கு பாதகம் இல்லாமல் மீண்டு வந்துள்ளது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.