மகாராஷ்டிரா மாநிலம் தானேவில், எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியின்போது ராட்சத கிரேன் உடைந்து விழுந்ததில் 16 பேர் பரிதமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் இன்று அதிகாலை நடைபெற்று வந்தது. அப்போது கட்டுமான பணியாளர்கள் பாலத்தை இணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் ஒன்று, சரிந்து இரும்பு பாலத்தின் மீது விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 16 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
அதையடுத்து உடனடியாக இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் பலர் பாலத்தின் அடியில் சிக்கியிருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.