ராஜஸ்தானின் கோட்டாவில், JEE-மெயின் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த 17 வயது மாணவர், தனது விடுதி அறையின் (hostel room) மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் கோட்டாவில், ஜேஇஇ-மெயின் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த 17 வயது மாணவர், தனது விடுதி அறையின் (hostel room) மின்விசிறியில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், சம்பவத்தன்று ஞாயிற்றுக் கிழமை மாலையில் சிறுவன் தனது அறையின் கதவை திறக்காததால், விடுதி காப்பாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அந்த அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, சிறுவன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளதாக போலிஸ் தரப்பில் கூறபட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், சிறுவன் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஜேஇஇ-மெயின் தேர்வில் தோல்வியடைந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சிறுவன் ஒரு மாதமாக பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், உயிரிழந்த மாணவனின் அறையில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் இதுவரை மீட்கப்படாததால், மாணவனின் மரணத்திற்கு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பயிற்சி மையங்களின் மையமாக இருக்கும் கோட்டா, 2022 இல் குறைந்தது 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது