இலங்கையில் பிறந்த தமிழ் நடிகர் போண்டா மணி 1991 ஆம் ஆண்டு கே பாக்யராஜ் இயக்கிய ‘பவுனு பவுனுதன்’ மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் திறமையான நடிகர் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தமிழ் மலையாளம்,கன்னட போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பிரபலமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து புகழ் பெற்றார்.மேலும் கௌடமணி, வடிவேலு, விவேக் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் போண்டா மணி திரை இடத்தைப் பகிர்ந்துள்ளார். ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ படங்களில் நடித்து அவருக்கு என தனி இடத்தை பிடித்தார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இவர், இலங்கையில் இருந்து வந்து தமிழகத்திலேயே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும், நடிப்பை தாண்டி சிறிய அளவில் கடை ஒன்றையும் சென்னையில் நடத்தி வருகிறார். நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்து உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
58 வயதாகும் போண்டா மணிக்கு, சமீபத்தில் திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து, மீண்டும் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உதவுங்கள் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் “நடிகர் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மேல் சிகிச்சைக்கு உதவுங்கள்.
உங்களுக்கு தெரிந்த அரசியல் தலைவர்களுக்கோ… அல்லது நண்பர்களுக்கோ பகிர்ந்து உதவி செய்யுங்கள். அனாதையாக இலங்கையில் இருந்து வந்து, இங்கேயே திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் அவர், மீண்டும் அனாதையாக பிள்ளைகளை விட்டு விட்டு செல்ல கூடாது என கண்ணீருடன் பேசியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நல குறைவு காரணமாக சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் நடிகர் சங்கம் அல்லது தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் (SIAA) துணைத் தலைவர் பூச்சி முருகன் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் ,”போண்டா மணி உடல்நிலை தேறி வருவதாகவும், இன்னும் சில நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போண்டா மணியின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நடிகருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களிலிருந்து சமூக ஊடகங்களில் பிரார்த்தனைகள் வருகின்றன, மேலும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.