தமிழ்நாட்டில் உள்ள 5,900 பெட்ரோல் நிலையங்களில் நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் பெறப்படாது என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் பழைய ரூ.1000, ரூ 500 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, கடந்த 2016ல் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ரூ.2000 நோட்டுக்கள் 2023 செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதனை அடுத்து 5 மாதங்கள் அவகாசம் வழங்கிய ரிசர்வ் வங்கி, ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது, இதையடுத்து பலரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தி வேறு பணத்தை மாற்றி வந்தனர்.
இந்த நிலையில் ரூ.2000 மாற்றுவதற்கான கெடு, இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உள்பட பல்வேறு துறைகளில், ரூ.2000 நோட்டுக்களை வாங்கக்கூடாது என உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை 28ம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பெட்ரோல் பங்க்குகளில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களிடம் ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால், அதற்கு சம்மந்தப்பட்ட ஊழியர்களே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது