திருச்செங்கோடு அருகே வாகன சோதனையின் போது 270 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் காரில் கடத்தி வரப்படுவதாக திருச்செங்கோடு புறநகர காவல்திறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் காவல்திறையினர் தோக்கவாடி பேருந்து நிறுத்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 270 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆம்னி வாகனத்தில் வந்த 4 பேரிடம் விசாரித்ததில் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து கொண்டு வந்து ஆங்காங்கே கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஆம்னி வாகனத்தில் வந்த பவானியை சேர்ந்த சதீஷ்குமார், ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், மோகன்ராஜ் பழனிச்சாமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்ததனர். மேலும் 270 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வாகனத்தையும் பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் செந்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து குட்கா பொருட்கள் கடத்தியவர்களை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், பாராட்டு தெரிவித்துள்ளார்.