கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று முதல் 27-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உலக பிரசித்தி பெற்ற கோவில்களுள் ஒன்று அருணாசலேஸ்வரர் கோவில். திருவண்ணாமலையில் அமைந்துள்ள இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த கார்த்திகை தீபத் இவ்விழாவை காண வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிலையில் நாளை கார்த்திகை தீபத் திருநாள் நடைபெறவுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், இதற்கான பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதே போல் நாளை மறுநாள் பவுர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவை காண பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக இன்று முதல் 27-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன் படி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மக்கள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் பேருந்து டிக்கெட்டுகளை முன்புதிவு செய்து கொள்ளலாம் அறிவித்துள்ளது.
அதே போல் வேலூர்- திருவண்ணாமலை, திருவாரூர்- திருவண்ணாமலை, தாம்பரம்- திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகள் கிடைக்கவும் ஏற்பாடுகளை மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.