தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கர்ப்பிணிகள் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெரு ஆற்றங்கரை பகுதியில் செந்தில் – வசந்தி தம்பதியர் வசித்து வந்த நிலையில், 38 வயதாகும் வசந்தி கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவரது கணவர் செந்தில் (48) கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்த நிலையில், ஆறாவதாக கர்ப்பம் தரித்த வசந்தி தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தில் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.
பிரசவத்திற்கு பின்னர் வசந்திக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த லோகநாயகி என்ற பெண்ணிற்கு அவரது கணவர் மாதேஷ் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யாமல் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
பிரசவத்தின் போது குழந்தை பிறந்த நிலையில், நஞ்சுக்கொடி வெளியேறாததால் லோகநாயகி சுயநினைவை இழந்துள்ளார். அதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போன்று தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கர்ப்பிணிகள் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தில் 99.8 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் தான் நிகழ்கிறது. இவற்றில் தற்செயலாக நடக்கும் பிரசவம் கூட உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறது.
இவற்றையெல்லாம் மீறித்தான், சில பிரசவங்களில் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் தாய் – சேய் மரணங்கள் நேரிட்டு வருகின்றன என்பதும் நிதர்சனமான உண்மை.