நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வழி செய்யும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 1996ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-744.png?resize=678%2C386&ssl=1)
முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆட்சிக் காலத்தில், 81ஆவது சட்ட திருத்த மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மூன்றில் ஒரு பங்கு ஆதரவை பெற வேண்டிய நிலையில், போதிய ஆதரவு பெறாமல் தோல்வி அடைந்தது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-745.png?resize=684%2C513&ssl=1)
இதனை அடுத்து, கடந்த 1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த தம்பிதுரை மசோதாவை அறிமுகம் செய்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா தோல்வி அடைந்தது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-746.png?resize=680%2C453&ssl=1)
1999, 2002 மற்றும் 2003 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயன்று தோல்வியை சந்தித்தது.பாஜகவுடன் காங்கிரஸ், இடதுசாரிகளின் ஆதரவு இருந்த போதும் மசோதா மூன்றில் ஒரு பங்கு ஆதரவை பெற தவறியது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-747.png?resize=681%2C384&ssl=1)
இந்நிலையில், 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மசோதாவை அறிமுகம் செய்து, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கும் அனுப்பியது
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-749.png?resize=1024%2C683&ssl=1)
2009ல் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, 2010ல் மாநிலங்களவையில் 186க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும், 15ஆவது மக்களவையில் நிறைவேறாததால் மசோதா காலாவதியானது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-748.png?resize=1024%2C576&ssl=1)
இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-750.png?resize=1024%2C576&ssl=1)
மக்களவையில் 15 சதவீதத்துக்கு கீழாகவும், மாநிலங்களவையில் 14 சதவீதத்துக்கும் கீழாகவும் மகளிர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும் கீழான அளவிலேயே மகளிர் இடம்பெற்றுள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/09/image-751.png?resize=1024%2C768&ssl=1)
கடந்த சில ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீடு மீண்டும் பேசு பொருளான நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.27 ஆண்டுகால கிடப்புக்கு முடிவுகட்டி பெண்கள் இடஒதுக்கீட்டில் புதிய வரலாறு எழுதப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.