இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலைகள் ஏற்படுகின்றன. “ரிங் ஆஃப் ஃபயர்” இல் அதன் இருப்பிடம் உள்ளதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.
கடந்த 2004 , 2018 கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பேரிழப்புக்களை ஏற்படுத்தியது. அதே போல் ஜனவரி 2 முதல் ஜெயபுரா நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 1,079 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 132 நிலநடுக்கங்கள் குடியிருப்பாளர்களால் உணரப்படும் அளவுக்கு வலிமையானவை என்றும் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று இரவு மீண்டும் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. பப்புவாவின் வடக்கு கடற்கரைக்கு அருகிலுள்ள ஜெயபுராவில் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதாகவும், இது 22 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளுக்குள் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இதில் கடற்கரையை ஒட்டி இருந்த ஓட்டல் இடிந்து கடலில் விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கட்டிட குவியல்களை தோண்ட தோண்ட சடலங்களாக மீட்கப்பட்டு திரும்பிய பக்கம் எல்லாம் கேட்கும் மரண ஓலங்களும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை அது ஏற்பட மூன்று நாட்களுக்கு முன்பே நெதர்லாந்து புவியியல் ஆய்வாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் கணித்திருந்தார் என்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ள நிலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஃபாசியாபத் அருகே காலை 10.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. பாய்சாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இந்தநிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. துருக்கி- சிரியா, இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது, மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.