ராஜஸ்தானில் 4 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பழிக்கு பழி வாங்கும் விதமாக படுகொலை செய்து, தீ வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் செராய் கிராமத்தில் 55 வயதாகும் பூனாரம் என்ற நபரும், அவரது மனைவி பன்வாரி இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியின் ஒரு மகன் உள்ள நிலையில் அவருக்கு சமீபத்தில் 23 வயதாகும் தபு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. பூனாரம்- பன்வாரி தம்பதி மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பூனாராமின் மகன் நேற்று வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு இரவில் கல்குவாரிக்கு வேலைக்குச் சென்று விட்டார். அவர் சென்ற பின்னர் அவரது குடும்பத்தினர் தூங்கச் சென்று உள்ளனர். அப்போது, திடீரென பூனாராமின் வீட்டில் இருந்து புகை வந்து உள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகே வசித்து வந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது 4 பேரும் தீயில் எரிந்து உயிரிழந்து கிடந்து உள்ளனர். அதையடுத்து, இந்த சம்பவம் குறித்த முதற் கட்ட விசாரணை நடத்திய பின்னர், எஸ்.பி. தர்மேந்திர சிங் யாதவ் இந்த விபத்து குறித்து கூறியுள்ளார்.
அதன்படி, தனிப்பட்ட பகையினால் இந்த படுகொலை நடந்திருக்க கூடும் எனவும், மேலும், ஒவ்வொரு கோணத்திலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும், பழிவாங்கும் நோக்கிலும் இந்த கொலை நடந்திருக்க கூடும் என்றும், இந்த சம்பவத்தில் கொலையாளி கோடரியை கொண்டு 4 பேரையும் படுகொலை செய்து விட்டு, உடல்களை இழுத்து கொண்டு வந்து வீட்டின் முன்புறத்தில் வைத்து, பின்பு தீ வைத்து எரித்து உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அந்த குடும்பத்தினரின் உறவினர் எனவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.