கோவை சூலூர் கலங்கல் பாதையில் குருவம்மாள் நகர் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும், தாய் திலகம் மற்றும் அவரது மகன் கவியரசன் ஆகியோர் கடையின் எதிரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று முன்தினம் மதியம் கவியரசன் மட்டும் கடையில் தனியாக இருந்த போது வெள்ளை நிற காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் போலீசார் என்றும் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. அதனால் கடையை சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
3 பேர் கடைக்குள் சென்று சோதனையிட ஒருவர் காரில் அமர்ந்திருந்துள்ளார். கடையில் சோதனை செய்த பின் குட்கா ஏதும் கிடைக்கவில்லை என கூறிய அந்த கும்பல், வீட்டிலும் சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி எதிரில் உள்ள வீட்டிற்கு கவியரசனை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவரிடமிருந்த செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர்.வீட்டிலும் எதுவும் கிடைக்காததால் கவியரசனைக் காரில் ஏற்றி உட்காரவைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றபின் காரிலிருந்து இறக்கி விட்டுச் சென்றனர். இதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த கவியரசன் வீட்டில் பணம் வைத்திருந்த பையை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது பையிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கவியரசன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.