திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் இல்லம் தேடி கல்வி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பெறுவதற்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், முகாம் பொறுப்பாளர், உதவியாளர் ஆகியோர் 500 -க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினர்.
இந்நிலையில், இவர்களுக்கான சம்பளத் தொகை நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் என கூறிய நிலையில் 10 நாட்கள் பணியாற்றியதற்கு சம்பளம் வழங்காததால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பூர் வடக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டதில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் இல்லம் தேடி கல்வி மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றிய பெண்கள்
மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாமில் விண்ணப்பம் பெறுவதற்கு பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு முகாமில் மொபைல் போனில் டேட்டா என்ட்ரி போடுவதற்கும், முகாம் பொறுப்பாளராக பணியாற்றுவதற்கும், உதவியாளராக பணியாற்றுவதற்கும் சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ 350 என வழங்கப்படுவதாக கூறப்பட்டதை ஏற்று பத்து நாட்கள் பணியாற்றியதற்கும், பயிற்சி முகாமில் பணியாற்றுவதற்கு தனியாக ரூபாய் 150 தருவதாக கூறியுள்ளனர்.
தற்போது இந்த சிறப்பு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் முகாமில் பணியாற்றிய மேற்கண்ட நபர்களுக்கு சம்பளம் பணம் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட பெண்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சம்பளத்தை வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது, பேட்ச் பை பேட்ச் ஆக பணம் வழங்கப்படுவதால் சம்பளம் அனைத்தும் வழங்கப்படும் என தெரிவித்தார்.