அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பாஜக அரசானது புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கி உள்ள நிலையில் ரெயில்களுக்கு தீ வைத்தும், பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனால் இத்திட்டத்தை திரும்பப்பெற தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது.
4 ஆண்டுகளுக்காக மட்டுமே என ராணுவ படைக்கு ஆளெடுத்து அவர்களை அக்னிவீரர்களென பயிற்சியளித்துப் பிறகு வீட்டுக்கு அனுப்புவது என்கிற இத்திட்டம், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாழும் பல கோடி இளைஞர்களின் கனவைச் சிதைப்பதாகவுள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும் அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான தேர்வு ஜூலை 24ம் தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.